01.பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ் மொழியில் காலத்தால் அழியாத கவிதை மழை பொழிந்த கவிஞர் பலர் உள்ளனர். அவர்களுள் புதுவை தந்த புரட்சிக்குயில் பாவேந்தர் பாரதிதாசனும் ஒருவர்." தமிழுக்கு அமுதென்று பேர். அந்தத் தமிழின்பத் தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்" என்று முழக்கமிட்ட புரட்சிக் கவிஞர் அவர்.
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய பாரதியின் எண்ணங்களை எம் இதயங்களில் ஏற்றியவர் பாவேந்தர் பாரதிதாசன். கனகசபை சுப்புரத்தினம் என்பதே அவர் இயற்பெயர். பாரதி மீது கொண்ட பாசத்தினால் தமது பெயரையே பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாவேந்தரின் கவிதைப் பயணம் நாடியது, உயரியது, அவருடைய தமிழ்ப்பணிக்கு ஈடில்லை. பாவேந்தர் படைப்புக்களின் தொடர்கள், உவமைகள், சந்தப்பாங்கு, அவற்றின் வீறுநடை தமிழருக்கும், தமிழறிந்தோருக்கும் நல்விருந்து.
தமிழை உயிராய், உணர்வாய், உழைப்பின் விளைவாய்க் கண்டுணர்ந்து கவிதை பாடியவர் பாவேந்தர் பாரதிதாசன். தமக்குப் பின் ஒரு பரம்பரையையே படைத்துச் சென்ற பெருமைக்குரியவர். பாவேந்தரின் சிந்தனைப் படைப்புகள் தமிழர்க்குக் கலங்கரை விளக்கு, அழகின் சிரிப்பு, குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, சேரதாண்டவம், இளைஞர் இலக்கியம், பிசிராந்தையார், தேனருவி, எதிர்பாராத முத்தம், குறிஞ்சித் திரட்டு, பாரதிதாசன் கவிதைகள் ஆகிய நூல்கள் அவர் தம் புகழ் பரப்பும் படைப்புகள். அவற்றைப் பயன்படுத்தி புதியதோர் உலகம் படைக்க உழைப்பது நம் கடமை.
தமிழே நல்லுயிர், தமிழே நன்மொழி, தமிழே தமிழரின் சொத்தென முழங்கிய பாவேந்தரின் நாமம் நீடு வாழ்க! வாழ்கவென வாழ்துவோம்.
Comments
Post a Comment