02.சுவாமி விபுலாநந்தர்

                            

                தமது வாழ்நாள் முழுவதும் துறவறத்தில் நின்று தமிழ் வளர தவம் புரிந்த பெருந்தகை ஆவார். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவர் வாழ்வு ஒப்பற்றது.

              மீன்பாடும் தேன்நாடு என்று போற்றப்படுவது மட்டக்களப்பு. அங்கே காரேறு மூதூரில் சாமித்தம்பிக்கும் கண்ணம்மைக்கும் அருந்தவ புதல்வராக 1892 ஆம் ஆண்டு பங்குனி மாதம் இருபத்தொன்பதாம் திகதி இவர் பிறந்தார். தாய், தந்தையர் இவருக்கு மயில்வாகனம் எனப் பெயர் சூட்டினர்.

             மயில்வாகனம் இளமையில் தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளையும் கற்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றார். விஞ்ஞானக் கல்வியில் நாட்டம் கொண்டார். பெளதிக சாஸ்திரத்தில் பி.எஸ்.சி பட்டமும் பெற்றார். தமிழியற் புலமை வாய்ந்த இவர் மதுரை தமிழ் சங்கத்தின் பண்டிதர் பட்டத்தையும் பெற்றார்.

            யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராகவும், மானிப்பாய் இந்துக் கல்லூரியில் அதிபராகவும் பணியாற்றினார். மயில்வாகனம் தமது ஆசிரியப் பணியைச் சிறப்பாக ஆற்றிய காலத்தில் அவரது உள்ளம் துறவு வாழ்க்கையைப் பெரிதும் விரும்பியது. இதன் காரணமாக இவர் இராமகிருஷ்ண  சங்க மடத்தைச் சேர்ந்து தமது முப்பதாவது வயதில் பூரண துறவியானார். மயில்வாகனம் எனும் இளமைப் பெயரைத் துறந்து பிரபோதசைதன்யர் என்னும் பெயரைப் பெற்றார். பின்னர் தமது முப்பத்திரண்டாவது வயதில் குருப்பட்டம் பெற்றுச் சுவாமி விபுலாநந்தர் என்னும் திருநாமத்தைப் பெற்றார்.

            சுவாமி கிழக்கிலங்கையின் கல்வி வளர்ச்சி கருதி இராமகிருஷ்ண சங்கத்தின் மூலம் பல பாடசாலைகளை நிறுவினர். அவற்றின் மூலம் கல்விப் பயிர் செழிக்க வழி செய்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிப் பலரதும் பாராட்டுதல்களைப் பெற்றார். பின்னர் இமயமலைச் சாரலிலுள்ள மாயாவதித் தவப்பள்ளியில் தங்கியிருந்த காலத்தில்  "பிரபுத்த பாரதம்" என்னும் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். இக்காலத்தில் தான் பதினான்கு ஆண்டுகளாக ஆராய்ந்து எழுதிய  "யாழ் நூல் " என்னும் ஒப்பற்ற நூலை அடிகளார் அண்ணாமலை நகரில் திருக்கொள்ளம் புத்தூர் கோயிலில் பேரறிஞர்கள் பலர் முன்னிலையில் அரங்கேற்றினார். ஒப்பற்ற இவ் ஆராய்ச்சி நூலை அடிகளார் எழுதியதன் மூலம் இசைத் தமிழுக்கு இணையிலாத் தொண்டாற்றியுள்ளார்.

            எழுத்தாற்றல், பேச்சாற்றல், கவிபுனையும் ஆற்றல் அனைத்தும் பெற்ற அடிகளார் பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், கவிதைகளையும், நூல்களையும் ஆக்கியுள்ளார். " ஈசன் உவர்க்கும் இன்மலர் மூன்று ", கங்கையில் விடுத்த ஓலை ஆகியன அவரது கவித்துவத்துக்குச் சிறந்த சான்றுகளாகும். சுவாமியின் ஆராய்ச்சித் திறனுக்கு யாழ் நூல் சான்று பகருகிறது. நாடகத்துறையில் அடிகளார் பெற்றிருந்த ஆற்றலுக்கு மதங்க சூளாமணி என்னும் நூல் ஏற்ற சான்றாகும்.

              இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் ஒப்பற்ற தொண்டாற்றிய சுவாமி விபுலாநந்தரைப் முத்தமிழ் முனிவர் என்று அறிஞர் உலகு போற்றுகிறது. ஈழம் தொட்டு இமயம் வரை புகழ் பரப்பிய சுவாமி விபுலாநந்தரின் நாமம் தமிழ் உள்ளவரை என்றும் நிலைத்து நிற்கும் என்பது திண்ணம். அவரால் நமது ஈழநாடு என்றும் பெருமை பெறும் என்பதில் ஐயமில்லை.  

                       


  

Comments

Popular posts from this blog