03. அன்னை தெரேசா 

                          

                  ஆதரவற்றவர்களின் அன்புத் தெய்வம், கருணையின் வடிவம், கர்த்தரின் அருட்கொடை என்றெல்லாம் போற்றப்படும் பெருமை மிக்கவர் அன்னை தெரேசா. ஐரோப்பா கண்டத்தில் அல்பேனியாவில் 6விவசாயக் குடும்பம் ஒன்றில் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் நாள் பிறந்தார் அன்னை தெரேசா. அவ்வூர் அரசினர் பாடசாலையில் தமது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். குழந்தைகள், பெரியார்கள், நோயாளிகள் போன்ற பலரோடும் இளமையிலேயே அன்பாகவும், மரியாதையாகவும் பழகி வந்தார். 

                      கிறிஸ்தவ மதத்தில் ஆழ்ந்த பற்றும் உறுதியும் கொண்டவர் தெரேசா. இயேசு பெருமானைப் போன்று மக்களுக்குத் தாமும் தொண்டாற்ற வேண்டும் என்று விரும்பினார். மக்கள் சேவைக்காகவே தம்மை அர்ப்பணித்தார்.

                      1925 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்து அல்லல்படும் மக்களுக்குத் தொண்டாற்ற விரும்பினார். கிறிஸ்தவ மத பொது நலச்சேவை என்னும் அமைப்பில் தன் இளமைப் பருவத்திலேயே அவர் சேர்ந்திருந்தார். இதனால் இந்தியா வந்து தொண்டாற்றுதற்கு அனுமதி தருமாறு அங்குள்ள தலைமைப் பாதிரியாரைக் கேட்டுக் கொண்டார். ஆனால் இவரது இளவயதைக் காரணம் காட்டி அனுமதி வழங்கப் பாதிரியார் மறுத்துவிட்டார்.

                    1928 ஆம் ஆண்டில் இவர் லோரேட்டா கன்னியர் மடத்தில் சேர்ந்தார். பின்னர் இந்தியாவுக்கு வந்து டார்ஜிலிங்கில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். ஆசிரிய பயிற்சியின் பின் கல்கத்தாவுக்கு வந்து அங்குள்ள கன்னியர் மடத்தில் நிரந்தர உறுப்பினராகச் சேர்ந்து கொண்டார்.

                     கல்கத்தா வீதிகளில் அம்மையார் கண்ட காட்சிகள் அவரது உள்ளத்தைப் பெரிதும் நெகிழச் செய்தன. பசிக்கொடுமையாலும் நோயாலும் மக்கள் வருந்துவதைக் கண்டு மனம் வருந்தினார். பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு உணவளிப்பதோடு, ஏழைக்குழந்தைகள் கல்விபெற வழி செய்ய வேண்டுமென அவரது கருணையுள்ளம் விரும்பியது. ஆனால் கன்னிகா மடத்து விதிகள் அவற்றினை மேற்கொள்ள இடமளிக்கவில்லை. இது குறித்து ரோமாபுரியில் உள்ள தலைமை மதகுருவுக்குப் பலமுறை எழுதினார். அவரது விடாமுயற்சி பயனளித்தது. 1948 ஆம் ஆண்டு ரோமாபுரியிலிருந்து அனுமதி கிடைத்ததும் அன்னை மிக்க மகிழ்ச்சி கொண்டார். கன்னியர் மடத்து உடைகளைக் களைந்து விட்டு வங்காளப் பெண்கள் போல உடையணிந்து கொண்டார். சாதாரண சேலையினையே தெரிந்து எடுத்துக் கொண்டார். இடது தோளில் உலோகத்தினாலான சிலுவைச் சின்னம் தொங்க, காலுக்குச் சாதாரண செருப்பு அணிந்து கொண்டார்.

                     சேரியின் மத்தியிலே ஒரு குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டார். சேரியைத் துப்பரவு செய்யும் பணியிலீடுபட்டார். சேரிவாழ் மக்கள் அன்னையுடன் அன்புடனும், மரியாதையுடனும் பழகினர். அவரது பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர். சேரியில் உள்ள சிறுவர்களுக்குக் கல்வி புகட்ட முற்பட்டார். பள்ளிக்கூடம் ஒன்றை அங்கு ஆரம்பித்துப் பாடம் சொல்லிக் கொடுத்தார். சிறுவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்துதவினார்.

                     1950 ஆம் ஆண்டு " அன்பின் தூதுவர்கள் " என்று பொருள்படும் இயக்கமொன்றை ஆரம்பித்தார். இவ்வியக்கம் மக்கள் ஆதரவுடன் வளரத் தொடங்கியது. சாதி, மத வேறுபாடு எதுவுமின்றி இவ்வியக்கத்தில் பலர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். பாடசாலைகள் அமைத்தல், மருத்துவ வசதியில்லாத இடங்களில் மருத்துவமனைகள் அமைத்தல், குழந்தைகள் காப்பகங்கள், அநாதை இல்லங்கள் அமைத்தல் ஆகிய பணிகளை இவ் இயக்கம் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டது. 

                      அநாதைக் குழந்தைகளை ஆதரித்து வளர்க்கும் பொருட்டு " நிர்மல் கென்னடி இல்லம்" என்ற இல்லத்தை நிறுவினர். தொழு நோயாளிகளுக்காகத் தொழுநோயாளர் இல்லத்தை தொடங்கினார்.  இவ்வாறு அன்னை தெரேசா அவர்களின் சேவைகள் அளப்பரியது.

                      



Comments

Popular posts from this blog